ஃபாக்ஸ் ஹில் வாகன ஓட்டிகள் கைது : விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது
தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேர் உயிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய இரண்டு கார்களை ஓட்டிச் சென்ற ராஜித உலுவிட்ட மற்றும் டிலான் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18வது போட்டி நிகழ்வான 1500 குதிரைத்திறன் பிரிவின் கீழ் நடைபெற்ற Ford Laser Mazda போட்டியில் மணிக்கு 160 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போட்டியின் மூன்றாவது சுற்றில், போட்டியாளர்களான ராஜித உலுவிட்ட மற்றும் டிலான் அதிகாரி ஓட்டிச் சென்ற கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதையடுத்து, ரஜித உலுவித ஓட்டிச் சென்ற கார் வீதி தடத்தை விட்டு அருகில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு போட்டி கண்காணிப்பாளர்களை வீழ்த்திக் கொண்டு பார்வையாளர்களை நோக்கி அதிவேகமாக வீசப்பட்டது.
விபத்து நடந்தவுடன், அப்பகுதி மக்கள் கதறி அழுததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் பதுளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தியத்தலாவ இராணுவ விஞ்ஞான பீடம் இணைந்து நடத்திய ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் போட்டியில் 25 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் போட்டி நடைபெற்றது. அதாவது, சரியாக ஏப்ரல் 21, 2019. அன்றுதான் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது. எனவே, போட்டியை நடுவழியில் ரத்து செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் உத்தரவிட்டனர்.
பின்னர் நேற்று (21) மீண்டும் போட்டி நடைபெற்றது. போட்டி வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய போட்டி மீண்டும் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த விதியின் நிகழ்வுகள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், நிலவும் வரட்சியான காலநிலையினால் ஏற்பட்டுள்ள அதிகப்படியான தூசியே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.