வறண்டது வீராணம் ஏரி
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், வீராணம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
1,100 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புகொண்டது வீராணம் ஏரி. இதன் கிழக்குப் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ., ஏரியின் மொத்த சுற்றளவு 48 கி.மீ., அதிகபட்ச அகலம் 5.6 கி.மீ. ஆகும். ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்களாகும். இதன் நீர்மட்ட அளவு 47.50 அடியாக உள்ளது. மொத்த நீர் கொள்ளளவு 1,465 மி.க.அடியாகும் (1.465 டி.எம்.சி).
கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் 49,440 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியின் பிரதான நீர்வரத்து கால்வாய் வடவாறு. இதன் மொத்த நீளம் 21.8 கி.மீ. இது, அணைக்கரை என்ற இடத்தில் கீழணை மூலம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீரைக் கொண்டு செல்கிறது.
சென்னைக்கு தண்ணீர் நிறுத்தம்: சென்னை பெருநகரக் குடிநீர் தேவைக்கு புதிய வீராணம் திட்டத்தை உருவாக்கி, அதன் மொத்த திட்ட மதிப்பீடான ரூ.720 கோடியில் ரூ.130 கோடி வீராணம் ஏரியின் கரைகளைப் பலப்படுத்துதல் மற்றும் அனைத்து கால்வாய்கள், பாசன மேம்பாட்டு பணிகளுக்கும், மீதமுள்ள ரூ.690 கோடி வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைப்பு உள்ளிட்ட அனைத்து குடிநீர் பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதிய வீராணம் திட்டம் நிறைவடைந்து 2004-ஆம் ஆண்டு முதல் வீராணம் ஏரியிலிருந்து சென்னை மாநகர குடிநீருக்காக விநாடிக்கு 78 கன அடி வீதம் குடிநீர் கொண்டு செல்ல திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 77 க.அடி வீதம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது வீராணம் ஏரி வறண்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
4 மாதங்கள் மட்டுமே சாகுபடி: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய இரு வட்டங்களும் காவிரி டெல்டா பாசன கடைமடைப் பகுதிகளாகும். இந்தப் பகுதியில் அதிக நீர்த்தேக்க வசதி கொண்ட ஒரே ஏரி வீராணம் ஏரியாகும். செயற்கைக்கோள் வரை படத்தின் உதவியுடன் ஏரியில் ஆய்வு செய்ததில், தற்போது 956 மி.க.அடி அளவுக்கு தண்ணீர் தேக்க முடிகிறது. மேலும், 48 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரினால் கூடுதலாக 509 மி.க. அடி தண்ணீரை தேக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
இதுகுறித்து இயற்கை விவசாயி க.சுரேஷ்குமார் கூறியதாவது: எதிர்வரும் மழைக்கு முன்பாக வீராணம் ஏரியை தூர்வாரி, சீரமைத்து கரைகளை பலப்படுத்திக் கொண்டால், வரும் காலங்களில் அதிகளவு தண்ணீரை ஏரியில் சேமித்து பயன்பெற முடியும் என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலர் ஏ.பெ.ரவீந்திரன் கூறியதாவது:
வீராணம் ஏரியிலிருந்து வீணாக வெளியேற்றப்படும் உபரிநீர் 33 கி.மீ. தொலைவு விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்து கடலில் கலக்கிறது. வீணாகும் உபரி நீரை சேமித்து சாகுபடி பணிகளுக்கு தட்டுப்பாடியின்றி வழங்க வீராணம் ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால், தமிழக அரசு 2012-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ், வீராணம் ஏரி தூர்வாரப்படும் என அறிவித்து, அதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடும் அறிவித்தது.
வீராணம் ஏரியை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து முழுமையாக பணி மேற்கொண்டால் 1,465 மி.கன அடி நீரை சேமிக்க முடியும்.
2012-ஆம் ஆண்டு அரசு அறிவித்த ரூ.40 கோடி நிதியில் தூர்வாரும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலனையும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டு வீராணம் ஏரியில் தூர்வாரும் பணியை முறையாகவும், முழுமையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
மேலதிக செய்திகள்
இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக பொங்கிய ஈரான்
அதிக வாக்குகள் பதிவான தொகுதிகள்: முதலிடத்தில் ஸ்ரீபெரும்புதூர்
இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா.
ஐடி நிறுவனங்களில் 65,000 ஊழியர்கள் பணி நீக்கம் – அதிர்ச்சி ரிப்போர்ட்
பிரதமரின் சர்ச்சை பேச்சு: மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!