லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், பவுலர்கள் ஏமாற்ற, சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ருதுராஜ் சதம் வீணானது.
இந்தியாவில் 17 வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, லக்னோ அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது.
சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ், ‘சீனியர்’ ரகானே ஜோடி துவக்கம் தந்தது. ஹென்றி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ரகானே (1) அவுட்டானார். மிட்செல் (11) மறுபடியும் கிடைத்த வாய்ப்பை வீணடித்து விரைவில் அவுட்டானார். ருதுராஜ், ஜடேஜா இணைந்தனர்.
மறுபக்கம் கேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ருதுராஜ். ஹென்றி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த இவர், குர்னால் பாண்ட்யா, யாஷ் தாகூர் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இவர், 28 வது பந்தில் அரைசதம் எட்டினார். ஜடேஜா 19 பந்தில் 17 ரன் எடுத்து வெளியேறினார். சென்னை அணி 12 ஓவரில் 102/3 ரன் குவித்தது.
ருதுராஜுடன் இணைந்தார் ஷிவம் துபே. ஸ்டாய்னிஸ் வீசிய 13வது ஓவரில், இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார். அடுத்து ருதுராஜூம் தன் பங்கிற்கு ஒரு சிக்சர் விளாசினார். யாஷ் தாகூர் 16 வது ஓவரை வீசினார். இதில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து மிரட்டினார் துபே. யாஷ் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி என அடித்த ருதுராஜ், ஐ.பி.எல்., தொடரில் இரண்டாவது சதம் கடந்தார்.
மொசின் கான் வீசிய 19 வது ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி என அடித்த துபே, அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது, துபே (66) ரன் அவுட்டானார். கடைசி பந்தை எதிர்கொண்ட தோனி பவுண்டரி அடித்தார். சென்னை அணி 20 ஓவரில் 210/4 ரன் குவித்தது. ருதுராஜ் (108), தோனி (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் (0), ராகுல் (16) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. படிக்கல் 13, பூரன் 34 ரன் எடுத்தனர். ஸ்டாய்னிஸ் 56 வது பந்தில் சதம் எட்டினார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. முஸ்தபிஜுர் வீசிய முதல் இரு பந்தில் 6, 4 என அடித்தார் ஸ்டாய்னிஸ். அடுத்து ‘நோ பாலாக’ வீசப்பட்ட பந்திலும் பவுண்டரி அடித்த ஸ்டாய்னிஸ், மறுபடியும் ஒரு பவுண்டரி விளாசினார். லக்னோ அணி 19.3 ஓவரில் 213/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் (124), தீபக் ஹூடா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.