கொள்ளை முயற்சியில் தோல்வியுற்ற ஆடவருக்குச் சிறை, பிரம்படி.
தோ பாயோ வட்டாரச் சிற்றங்காடியில் 74 வயதுக் காசாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்ற ஆடவருக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஈராண்டுச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மஹ்முட் அப்டெல்தவாப் ரியாத் அப்தெலாக் எனும் அந்த 39 வயது ஆடவர், தன் மனைவியின் ஆடைகளை அணிந்துகொண்டு கொள்ளையடிக்க முயற்சி செய்தார்.
எகிப்து நாட்டவரான அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி. கொள்ளையடிக்க முயன்றது, திருடியது ஆகியவை தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
சென்ற ஆண்டு (2023) ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 1.20 மணியளவில் மஹ்முட் தன் மனைவியின் கறுப்பு ஆடை, தலை அங்கி, சாம்பல் நிறக் கையுறைகள், கறுப்பு முகக்கவசம் ஆகியவற்றை அணிந்தபடி, தோ பாயோவில் உள்ள 24-மணி நேரச் சிற்றங்காடிக்குச் சென்றார்.
காசாளரான முதிய பெண் தனது இருக்கையில் அமர்ந்தபடி செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்புறமாக நடந்துசென்ற மஹ்முட், முகத்தருகே கத்தியைக் காட்டி சத்தம் போடவேண்டாமென மிரட்டினார்.
அதிர்ச்சி அடைந்த காசாளர் உரக்கக் கத்தவே, மஹ்முட் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டார்.
தான் அடையாளம் காணப்படாமலிருக்க, தான் அணிந்திருந்த மனைவியின் ஆடைகளையும் கத்தியையும் இரண்டு குப்பைத் தொட்டிகளில் அவர் வீசியதாகக் கூறப்பட்டது.
சம்பவ நாளன்றே மஹ்முட் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, 2022 நவம்பரில் தங்கள் வீட்டில் தங்கியிருந்த மனைவியின் சகோதரியிடமிருந்து இரண்டு மோதிரங்களை அவர் திருடியதாகக் கூறப்பட்டது.
தனது கணவருடன் மஹ்முட் வீட்டின் ஓர் அறையில் தங்கியிருந்த அப்பெண் அறையைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தபோது, மாற்றுச் சாவியைக்கொண்டு அறையைத் திறந்த மஹ்முட் மோதிரங்களைத் திருடினார். அவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட S$3,200. மஹ்முட் அவற்றை $247க்கு அடகு வைத்ததாகத் தெரிகிறது.