வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தால் : அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன் எம்.பி. அழைப்பு

“எமது அரசியல் செயற்பாட்டுக்கு அரசு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருப்பதால் வடக்கு, கிழக்கில் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்.”
– இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதிக்கு விஜயம் செய்துள்ள சுமந்திரன் எம்.பியிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசானது எமது அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்காகப் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தடைகள், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்காகவே நாளை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்குக் கோரப்பட்டுள்ளது. முழுமையாக ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன்” – என்றார்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது,
“கடந்த காலங்களில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் குறைகள் இருந்ததை நாம் அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கும் தயாராக இருந்தோம். ஆனால், இந்தச் சட்டத்தை தற்போது முழுமையாக இல்லாமல் பண்ணுவது என்பது பழைய நிலைக்குச் செல்வது போன்றதாகும். அதாவது 18 ஆவது திருத்தத்துக்கு மீண்டும் செல்வது என்பது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். அதனால்தான் புதிய வரைவான 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கவுள்ளோம்” – என்றார்.