காசாவின் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.
காசாவின் தெற்கு முனையில் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இதனை அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். தாக்குதலுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாகவும், அரசின் அனுமதி கிடைத்ததும் தாக்குதல் துவங்கும் எனவும் கூறினார்.
23 லட்சம் பேர் வசிக்கும் இந்நகரில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனை இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை. ரபா நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்காக 40 ஆயிரம் கூடாரங்களை இஸ்ரேல் ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு கூடாரத்தில் 10 முதல் 12 பேர் தங்கலாம். இந்நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கே ஒரு மாதம் ஆகலாம் எனக்கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக எகிப்து நாட்டு உளவுத்துறையினருடனும் இஸ்ரேல் அரசு ஆலோசனை நடத்தி உள்ளது. ஆனால் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எகிப்து அரசு, இதனால், பேரழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்து உள்ளது. இஸ்ரேலுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.