பேர்ஸ்டோவ் சதம்,262 ரன்னை விரட்டிய பஞ்சாப் அணி சாதனை வெற்றி பெற்றது.
கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரான் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
கோல்கட்டா அணிக்கு பில் சால்ட், சுனில் நரைன் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. அர்ஷ்தீப் சிங் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் நரைன். மறுமுனையில் அசத்திய சால்ட், ஹர்ஷல் படேல் பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ரபாடா வீசிய 4வது ஓவரில் நரைன் ஒரு சிக்சர், 2 பவுண்டரி, சால்ட் ஒரு பவுண்டரி அடிக்க 21 ரன் கிடைத்தன. ‘பவர் பிளே’ ஓவரின் முடிவில் கோல்கட்டா அணி 76/0 ரன் எடுத்திருந்தது.
ரபாடா பந்தில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த நரைன், 23 பந்தில் அரைசதம் கடந்தார். ராகுல் சகார் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சால்ட், 25 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்த போது ராகுல் சகார் ‘சுழலில்’ நரைன் (71 ரன், 4 சிக்சர், 9 பவுண்டரி) சிக்கினார். பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய வெங்கடேஷ், ஹர்பிரீத் பிரார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். சாம் கர்ரான் வீசிய 13வது ஓவரின் முதலிரண்டு பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட சால்ட் (75 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆன்ட்ரி ரசல் (24) ஓரளவு கைகொடுத்தார். சாம் கர்ரான் வீசிய 18வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன் குவித்த கேப்டன் ஸ்ரேயாஸ் (28) நம்பிக்கை தந்தார். ரிங்கு சிங் (5) ஏமாற்றினார். கடைசி பந்தில் வெங்கடேஷ் (39) ‘ரன்-அவுட்’ ஆனார்.
கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 261 ரன் எடுத்தது. ராமன்தீப் சிங் (6) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஹர்ஷித் ராணா, சமீரா ஓவரில் தலா 2 சிக்சர் விளாசிய பிரப்சிம்ரன், 18 பந்தில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் ‘ஜாலி’யாக ஆடிய பேர்ஸ்டோவ், அனுகுல் ராய் வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது பிரப்சிம்ரன் (54) ‘ரன்-அவுட்’ ஆனார். நரைன் ‘சுழலில்’ ரோசோவ் (26) சிக்கினார். வருண் சக்கரவர்த்தி, ரசல் பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய பேர்ஸ்டோவ், 45 பந்தில் சதத்தை எட்டினார்.
வருண் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட சஷாங்க் சிங், சமீரா வீசிய 17வது ஓவரில் 3 சிக்சர் அடித்தார். ஹர்ஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சஷாங்க் 23 பந்தில் அரைசதம் கடந்தார். பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 262 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் (108 ரன், 9 சிக்சர், 8 பவுண்டரி), சஷாங்க் (68 ரன், 8 சிக்சர், 2 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோல்கட்டா அணி நிர்ணயித்த 262 ரன்னை விரட்டிய பஞ்சாப் அணி, ஒட்டுமொத்த ‘டி-20’ அரங்கில் அதிக ரன்னை ‘சேஸ்’ செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் தென் ஆப்ரிக்க அணி 259 ரன்னை (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2023, செஞ்சுரியன்) விரட்டியது சாதனையாக இருந்தது.
இப்போட்டியில் 42 சிக்சர் (கோல்கட்டா-18, பஞ்சாப்-24) பதிவாகின. இது, ‘டி-20’ அரங்கில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் ஆனது. இதற்கு முன் ஐதராபாத்-மும்பை (2024), பெங்களூரு-ஐதராபாத் (2024) அணிகள் மோதிய போட்டியில் தலா 38 சிக்சர் பதிவாகின.
கோல்கட்டா அணிக்காக 200 சிக்சர் விளாசிய முதல் வீரரானார் ரசல் (201). அடுத்த இரு இடங்களில் நிதிஷ் ராணா (106 சிக்சர்), நரைன் (88) உள்ளனர்.
கோல்கட்டா சார்பில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடிகள் வரிசையில் நரைன்-சால்ட் (138 ரன்) 4வது இடம் பிடித்தது. முதலிடத்தில் காம்பிர்-லின் (183* ரன், எதிர்: குஜராத், 2017, ராஜ்கோட்) ஜோடி உள்ளது.
கோல்கட்டா அணி (261/6) தனது 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. சமீபத்தில் 272/7 ரன் (எதிர்: டில்லி, 2024, விசாகப்பட்டனம்) குவித்தது கோல்கட்டாவின் சிறந்த ஸ்கோராக உள்ளது.