ஒற்றையாட்சி முறைமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் பேராயர்! – முஸ்லிம் தலைவர்களும் இதனைச் செய்ய வேண்டும் என்று கஜேந்திரன் கோரிக்கை.

“இலங்கைக்குச் சாபக்கேடாக மாறியுள்ள ஒற்றையாட்சி முறைமையை நீக்க வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுக்க வேண்டும். முஸ்லிம் தலைவர்களும் இதனைச் செய்ய வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், முதுகெலும்பிருந்தால் ஒற்றையாட்சி நீக்கப்பட்டு, சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வெளியிடட்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரிகளைத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்கின்றார். தாக்குதலுக்குப் பின்னரும் அவர் ஜனாதிபதிப் பதவியில் இருந்தார். எனவே, அரச இயந்திரம் மற்றும் புலனாய்வுப் பிரிவைப் பயன்படுத்தி இதற்குரிய நடவடிக்கையை ஏன் அவர் எடுக்கவில்லை?

75 ஆண்டுகளாக இந்த நாட்டை குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றையாட்சி முறைமையை மாற்றுமாறு பேராயர் கோரிக்கை முன்வைக்க வேண்டும். கத்தோலிக்க சமூகம் மீது கரிசனை கொண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றி பேராயர் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றால் இந்தக் கோரிக்கையை விடுக்குமாறு அவரிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல் முஸ்லிம் தலைவர்களும் ஒற்றையாட்சி முறைமைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

சஜித் பிரேமதாஸவாக இருக்கலாம், அநுரகுமார திஸாநாயக்கவாக இருக்கலாம், இவர்கள்கூட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தமாட்டார்கள். ஏனெனில் இவர்கள்கூட இலங்கையானது சிங்கள, பௌத்த ஒற்றையாட்சி கொண்ட நாடாகவே இருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். அவர்களிடம் நேர்மை இருந்தால் ஒற்றையாட்சி முறைமையை அழித்து, சமஷ்டி முறைமை கொண்டுவரப்படும் என அறிவிக்கட்டும். முதுகெலும்பிருந்தால் அவர்கள் இதனைச் செய்யட்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.