விளை நிலங்கள் விற்பனைக்கா? – திருகோணமலையில் மக்கள் ஆர்ப்பாட்டம்.
திருகோணமலை மாவட்டம், முத்து நகர் பிரதேச விவசாயிகளின் விவசாய நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகைக்குக் கொடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முத்துநகர் ஆர்.டி.எஸ். கட்டடத்தில் இருந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் வயல் நிலம் வரை சென்றடைந்து பின்னர் மீண்டும் அவ்விடத்தை வந்தடைந்தது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“நீண்ட காலமாக குடியிருந்து வரும் எமது குடியிருப்புகளையும் விவசாய நிலங்களையும் விட்டு வெளியேறுமாறு துறைமுகங்கள் அதிகார சபை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நாங்கள் வாழுகின்ற பூமியைக் கொடுப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இங்கு எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நாம் பரம்பரையாக வாழ்ந்து வரும் நிலத்திலிருந்து வெளியேறப்போவதில்லை.” – என்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் ரியாசுதீனும் கலந்துகொண்டார்.