படுகொலை சதித் திட்டங்களில் இந்தியாவின் பங்கு இருப்பதாகக் கூறப்படுவது ‘தீவிரமான விவகாரம்’ – அமெரிக்கா.
வாஷிங்டன்: அமெரிக்காவிலும் கனடாவிலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சதித் திட்டங்களில் இந்திய உளவுத் துறையின் பங்கு இருப்பதாகக் கூறப்படுவதை மிகக் கடுமையாகக் கருதுகிறோம் என்று அமெரிக்கா திங்கட்கிழமை (ஏப்ரல் 29) அன்று தெரிவித்தது.
அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சிக்கும் சீக்கியர் ஒருவரைக் கொல்ல இந்திய உளவுத் துறை அதிகாரி ஒருவர் நேரடியாக ஈடுபட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்தக் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதத்தில் கனடாவில் சீக்கிய ஆதரவாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சதியிலும் அதே அதிகாரிக்குப் பங்கு இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது.
ஆனால் வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல் ஆதாரமற்றது என்று கூறியுள்ள இந்தியா இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாகக் கூறியது.
“ஊகங்கள் மற்றும் பொறுப்பற்ற கருத்துகளால் எந்தவிதப் பலனும் ஏற்படப் போவதில்லை,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தைத் தீவிரமாக, மிகத் தீவிரமாகக் கருதுகிறோம்,” என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கரின் ஜீன்-பியரி செய்தியாளர்களிடம் கூறினார்.
“எங்களுடைய கவலையைத் தொடர்ந்து எழுப்பவிருக்கிறோம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீக்கியர்களுக்கென்று காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குர்பத்வந்த் சிங் பன்னைக் கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாகக் கடந்த நவம்பரில் அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
ஆனால் அந்தப் படுகொலைத் திட்டம் தோல்வி அடைந்தது. அமெரிக்காவில் காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வரும் பன், கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர்.
இவர், நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பின் வழக்கறிஞர். இவர் 2020ஆம் ஆண்டு இந்தியாவால் ‘பயங்கரவாதி’ என்று அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டு குறித்துக் கவலை தெரிவித்த இந்தியா, இது பற்றி விசாரிக்கப்படும் என்று அப்போது கூறியிருந்தது. நவம்பர் 18ஆம் தேதி அமைக்கப்பட்ட குழு கண்டுபிடிக்கும் விவரங்களை வைத்துத் தேவை ஏற்பட்டால் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறி இந்தியா இந்த விவகாரத்திலிருந்து விலகிக்கொண்டது.
அமெரிக்கா, கனடாவில் நடந்த படுகொலை விவகாரம் இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் அமெரிக்காவும் இந்தியாவும் உறவைப் பலப்படுத்தும் வேளையில் படுகொலை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.
ஜூனில் கனடாவின் வான்கூவர் புறநகர்ப் பகுதியில் மற்றொரு சீக்கியப் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சதியில் இந்திய உளவுத் துறைக்குப் பங்கு இருக்கும் என்ற குற்றச்சாட்டின் தொடர்பில் நம்பகமான தகவல்களைத் தேடி வருவதாகக் கனடா கூறியிருந்தது.
இதனையும் இந்தியா வன்மையாக மறுத்திருந்தது.