லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
ஸ்டாய்னிஸ் அரைசதம் கைகொடுக்க, லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. லக்னோவில் நேற்று நடந்த ஐ.பி.எல்., போட்டியில் மும்பை, லக்னோ அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது.
மும்பை அணிக்கு ரோகித், இஷான் கிஷான் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ரோகித் 4 ரன் மட்டும் எடுத்து மொசின் கான் பந்தில் வீழ்ந்தார். சூர்யகுமார் (10) நிலைக்கவில்லை. திலக் வர்மா (7) ரன் அவுட்டானார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வந்த வேகத்தில் எதிர்கொண்ட முதல் பந்தில், ராகுலிடம் ‘கேட்ச்’ கொடுத்து ‘டக்’ அவுட்டாகி வெளியேறினார்.
மும்பை அணி 27 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து இஷான், வதேரா இணைந்து அணியை மீட்க போராடினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது, ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கினார் இஷான் (32).
மறுபுறம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வதேரா, மயங்க் யாதவ் வீசிய 15வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 16 ரன் விளாசினார். பிஷ்னோய் பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பிய இவர், 46 ரன் எடுத்து அவுட்டானார். முகமது நபி (1) ஏமாற்றினார்.
கடைசி நேரத்தில் டிம் டேவிட் சற்று வேகமாக ரன் சேர்த்து அணிக்கு உதவினார். மொசின் கான் வீசிய 18 வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர், 20 வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ரன் மட்டும் எடுத்தது. டேவிட் (35) அவுட்டாகாமல் இருந்தார்.
லக்னோ அணிக்கு ராகுல் (28), குல்கர்னி (0) ஜோடி துவக்கம் தந்தது. தீபக் ஹூடா 18 ரன் எடுத்தார். ஸ்டாய்னிஸ் ஐ.பி.எல்., தொடரில் 9வது அரைசதம் எட்டினார். இவர் 62 ரன் எடுத்து அவுட்டானார். டர்னர் (5), படோனி (6) ஏமாற்றிய போதும், பூரன் (14), குர்னால் (1) அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். லக்னோ அணி 19.2 ஓவரில் 145/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்., 17 வது சீசனில் ‘பவர் பிளே’ ஓவரில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி வரிசையில் மும்பை இரண்டாவது இடம் பிடித்தது. நேற்று முதல் 6 ஓவரில் 28/4 ரன் எடுத்தது. இதில் பஞ்சாப் (27/3, எதிர்-ஐதராபாத்) முதலிடத்தில் உள்ளது.