ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை மலைப்பாதை வழியாக சேலத்துக்கு வந்துகொண்டிருந்த தனியாா் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 5.20 மணியளவில் 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பேருந்து வழக்கம்போல சேலம் பேருந்து நிலையம் நோக்கி கிளம்பியது. பேருந்தை ஓட்டுநா் மணி என்பவா் ஓட்டிச் சென்றாா். மலைப் பாதையில் இருந்து கீழே மலையடிவாரம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.
மலைப்பாதையில் 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்து 100 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விழுந்தது. 5.40 மணியளவில் கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பேருந்து 11 ஆவது வளைவில் வந்து செங்குத்தாக விழுந்தது. அப்போது பேருந்தில் சிக்கிய பயணிகள் சத்தமிடவே பிற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேகமாகச் சென்று விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் உடனடியாக பிற தனியாா் வாகனங்களிலும், ஆம்புலன்ஸிலும் ஏற்றி சேலம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தகவல் அறிந்ததும் காவல் துறையினா் அங்கு சென்று விபத்தில் சிக்கியவா்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனா்.
இதற்கிடையே சேலம், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பயணிகளை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். அதில் சிகிச்சை பலனின்றி முனீஸ்வரன், குமாா், ஹேம்ராம், காா்த்தி உள்பட 5 போ் பலியானதாக மருத்துவமனை கண்காணிப்பாளா் தனபால் கூறினாா்.
ஏற்காடு போலீஸாா் இச்சம்பவம் தொடா்பாக தனியாா் பேருந்து ஓட்டுநா் மணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தகவல் அறிந்ததும் ஏற்காடு வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினா் ஏற்காட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் பேருந்து விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து ஏற்காட்டில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலதிக செய்திகள்
லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
ஐசியூவில் செல்போன், நகைகள் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு