தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 கொடுக்க முடியாது : நீதிமன்றம் செல்லும் தோட்டக் கம்பனிகள்.
ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 30ஆம் திகதி இரவு முதல் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேயிலைத் தோட்டக் கம்பனிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த வர்த்தமானியை ரத்து செய்யுமாறு தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தேயிலைத் தோட்டக் கம்பனிகளின் உயர் அதிகாரிகளுடன் கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று (02) இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னரே நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.