48 மணி நேரம் தேர்தல் பரப்புரை… தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தடை!
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சிர்சில்லாவில் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி பேட்டியளித்த, பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ்,
காங்கிரஸ் கட்சி குறித்து இழிவாகவும் மற்றும் ஆட்சேபகரமான வகையிலும் பேசியதாக, அம்மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் நிரஞ்சன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி, தெலங்கானா தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, சந்திர சேகர ராவ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதன்கிழமை இரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு சந்திரசேகர ராவ் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பொதுக்கூட்டம், பேரணியில் பங்கேற்கக் கூடாது எனவும், தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் வழங்கக்கூடாது எனவும், டிவி, நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில் பேட்டியளிக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.