சுதந்திரக் கட்சியை மீட்பதே எனது இலக்கு! – விஜயதாஸ சூளுரை.
“நான் மைத்திரிபால சிறிசேனவின் காவலன் அல்லன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கவே வந்துள்ளேன். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் கட்சியைப் பலப்படுத்த முடியும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக மைத்திரிபால தரப்பால் நியமிக்கப்பட்டவரும் நீதி அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நான் பதவிகளுக்காகச் சண்டையிடுபவன் அல்லன். சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும் நோக்கமும் கிடையாது. கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே பதவியை ஏற்றேன். இதன் பின்னணியில் வேறு சூழ்ச்சி எதுவும் இல்லை.
சுதந்திரக் கட்சியில் உள்ள எந்தவொரு தரப்புடனும் எனக்குப் பிரச்சினை இல்லை. நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன்.
ஒன்றிணைந்தால் கட்சியைப் பலப்படுத்தலாம். கட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்.” – என்றார்.