படுமோசமான ஆட்சிக்கு முடிவு கட்டி மக்கள் சார் அரசை நிறுவுவோம்! – நோர்வே தூதுவரிடம் சஜித் திட்டவட்டம் .

இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே எலின் ஸ்டெனருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நேற்று (02) விசேட சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் நோர்வேத் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஜோன் பிஜேர்கெமும் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்தும் அதிலிருந்து மீள்வது குறித்தும் நோர்வேத் தூதுவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரியப்படுத்தியதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

இந்த ஆண்டு இந்நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டு என்றும், முக்கியமான தேர்தல் நடைபெறும் என்றும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தற்போதைய படுமோசமான ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும், மக்கள் சார் அரசு ஸ்தாபிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அதன்பின்னர், நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்குக் கொண்டுவர ஐக்கி்ய மக்கள் சக்தி எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்தார்.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, எரான் விக்கிரம ரத்ன மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.