பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி.
பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் டுபிளசி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
குஜராத் அணிக்கு சகா (1), கேப்டன் சுப்மன் கில் (2), சாய் சுதர்சன் (6) ஏமாற்றினர். பின் இணைந்த ஷாருக்கான் (37), டேவிட் மில்லர் (30) ஜோடி ஆறுதல் தந்தது. யாஷ் தயால் ‘சுழலில்’ ரஷித் கான் (18), டிவாட்டியா (35) சிக்கினர். வைஷாக் வீசிய கடைசி ஓவரில் மானவ் சுதர் (1), மோகித் சர்மா (0), விஜய் சங்கர் (10) அவுட்டாகினர். குஜராத் அணி 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு விராத் கோலி, டுபிளசி ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. மோகித் சர்மா வீசிய முதல் ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார் கோலி. ஜோஷ் லிட்டில் வீசிய 2வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த டுபிளசி 18 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த போது டுபிளசி (64) அவுட்டானார்.
வில் ஜாக்ஸ் (1), ரஜத் படிதர் (2), மேக்ஸ்வெல் (4), கிரீன் (1) ஏமாற்றினர். கோலி (42) நம்பிக்கை தந்தார். பெங்களூரு அணி 117 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த தினேஷ் கார்த்திக், சுவப்னில் சிங் ஜோடி அணியை கரை சேர்த்தது. ரஷித் வீசிய 12வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார் கார்த்திக். நுார் அகமது வீசிய 13வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய சுவப்னில், ரஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.
பெங்களூரு அணி 13.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் (21), சுவப்னில் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.