இந்தோனேஷியாவின் தொடர்ந்து பெய்யும் கனமழையால் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் கடந்த 3ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் லுாவு மாவட்டத்தில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
இங்குள்ள 13 பிராந்தியங்களில், 10 அடி உயரத்துக்கு சேற்றுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 42 வீடுகள் அடியோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 1,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் ரப்பர் படகுகள் மற்றும் வாகனங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கி தவித்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இவர்களில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பில் வசித்தவர்கள் மீட்கப்பட்டு, அங்குள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.