கோட்டாபய அழித்த மாலம்பே இலகு ரயில் கனவு, நனவாகிறது.
கோத்தபாய அரசாங்கத்தினால் தன்னிச்சையாக நிறுத்தப்பட்ட மாலம்பே கொழும்பு இலகு ரயில் திட்டம் (LRT) உள்ளிட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக நாட்டிற்கு விஜயம் செய்திருந்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (04) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை விடுவித்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் மற்றும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகளை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா பாராட்டினார் .
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விஸ்தரிக்கும் திட்டமும் மீண்டும் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை வலுவாக வாதிடும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்,
இலங்கையில் புதிய சட்டங்களை இயற்றுவதன் மூலம் இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளை பாராட்டினார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்று தெரிவித்தார். கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதையும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொண்டார்.