ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு’மொட்டு’ பேராதரவு வழங்க வேண்டும்! – எஸ்.பி. கோரிக்கை.
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. எனவே, அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவு வழங்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக அரசை அமைப்பது குறித்து பொதுஜன பெரமுன விசேட கவனம் செலுத்த வேண்டும்.”
இவ்வாறு ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்துக்கள் மாத்திரம் வெளிப்பட்டதே தவிர தொழிலாளர்களின் உரிமை பற்றி எந்த அரசியல் கட்சி மேடைகளிலும் பேசப்படவில்லை.மே தினக் கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்துள்ளமை கவலைக்குரியது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பலமுறை முன்வைத்துள்ள போதும் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தும் சூழல் காணப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. எனவே, அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவு வழங்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக அரசை அமைப்பது குறித்து பொதுஜன பெரமுன விசேட கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பலப்படுத்தும் பொறுப்பு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொள்ளுமாறு கட்சியின் தலைவர்கள் மற்றும் தேசிய அமைப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ இவ்விடயம் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார். கட்சியில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக்கொண்டு ஒன்றிணைந்து செயற்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் பலமான அரசை அமைக்கலாம்.” – என்றார்.