தமிழகக் காவல்துறை இணையத்தளத்தை முடக்கிய இணைய ஊடுருவல்காரர்கள்.
இணைய ஊடுருவல்காரர்களால் தமிழக காவல்துறையின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
அந்த இணையத்தளத்துக்குள் நுழையத் தேவைப்படும் மறைசொல்லை யாரோ திட்டமிட்டுத் திருடியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த அத்துமீறல் குறித்து காவல்துறையின் இணைய குற்றப்பரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாக தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகளின் தரவுகள், புகார் குறித்த தரவுகளை மின்னிலக்க முறையில் சேமித்து வைக்கிறது. காவல்துறையின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலும் இத்தரவுகள் உள்ளன.
இந்த ஏற்பாடுகளின் துணையோடு முக அடையாளம் காணும் செயலியின் உதவியோடு குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில, முக அடையாளம் தொடர்பான செயலியும் இணையத்தளமும் இணைய ஊடுருவல்காரர்களால் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முக அடையாளம் காணும் செயலி கொல்கத்தா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயலி தமிழகம் முழுவதும் 46,112 பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், இணைய ஊடுருவல்காரர்களால் தமிழக காவல்துறையின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.