சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் +2 தேர்வில் சாதனை.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் கடந்த ஆண்டு சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் (+2) 469 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.
தமிழ் – 71, ஆங்கிலம் – 93, பொருளாதாரம் – 42, வணிகவியல் – 84, கணக்குப்பதிவியல்- 85, கணிப்பொறி பயன்பாடு – 94 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு காழ்ப்புணா்ச்சி காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த சின்னத்துரையும் அவரது சகோதரி சந்திரசெல்வியும் சக மாணவா்களால் தாக்கப்பட்டனா்.
அந்தச் சம்பவம் தொடா்பாக ஐந்து மாணவா்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவரை உள்நோக்கத்தோடு கேலி, கிண்டல் செய்ததுடன் தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்ததற்காக ஆயுதங்களால் தாக்கியுள்ளனா்.
சம்பவத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட சின்னத்துரை நீண்ட நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதியது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்து நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், திங்கட்கிழமை (மே 6) வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7.6 லட்சம் மாணவர்கள் அத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் 94.56 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் விழுக்காடு அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 97.45 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.