பாதாள உலகக் குழு மன்னா ரமேஷ் துபாயிலிருந்து கொழும்புக்கு..

டுபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாட்டின் முன்னணி பாதாள குழுத் தலைவர்களில் ஒருவராகவும் போதைப்பொருள் கடத்தல்காரராகவும் புகழ்பெற்ற மன்னா ரமேஷ் மற்றும் அவரது சீடர்கள் என்று கூறப்படும் மூன்று பேர் இன்று (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் விசேட உத்தரவின் பேரில் இந்த நான்கு பாதாள உலக உறுப்பினர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நேற்று டுபாய் சென்றதாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.
பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நடவடிக்கையின் கீழ் விசேட இரகசிய பொலிஸ் குழு டுபாய்க்கு சென்றது.
பாதாள உலகக் குழுத் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் பயணித்தபோது டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது சீடர்கள் மூவரையும் டுபாய் போலீசார் கைது செய்தனர்.
ரெட் நோட்டீஸ் வழங்கப்பட்ட 43பேர் பட்டியலில் மன்னா ரமேஷும் இருப்பதாக கூறப்படுகிறது.
மன்னா ரமேஷ் உள்ளிட்ட சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நாட்டிற்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலசுடன் தொலைபேசியில் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.