காதலியை தேடிச் சென்ற இளைஞன் , சடலமாக காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காதலியின் வீட்டுக்கு சென்ற போது காணாமல் போன குளியாப்பிட்டிய இளைஞனின் சடலம் 15 நாட்களுக்குப் பின்னர் இன்று (07) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளைஞன் கொல்லப்பட்டு சடலம் எரிக்கப்பட்ட நிலையில் மாதம்பை பனிரெண்டாவ பிரதேசத்தில் உள்ள காட்டிலிருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய கபலாவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சுசித ஜயவம்ச கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
இந்த இளைஞன் உணவுக் கடை ஒன்றை நடத்தி வந்ததுடன், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாப்பிட்டிய வஸ்ஸவுல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டுக்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றிருந்த நிலையில், அதன் பின்னர் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
காணாமல் போன இளைஞனின் கையடக்கத் தொலைபேசி இணைப்பு கடைசியாக துண்டிக்கப்பட்ட புத்தளம் பிரதேசத்தில் காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும், ஆனால் அது எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது அல்லது அதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞனின் காதலியின் தந்தை சுஜித் பெர்னாண்டோ என்றழைக்கப்படும் ‘சிங்கிந்தி’ என்பவர் , இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்க குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் நேற்று (06) உத்தரவிட்டது.