அவசர அவசரமாக சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர்! இதான் ஐபிஎல் ஸ்க்ரிப்ட்?
2024 ஐபிஎல் தொடரில் அம்பயர்கள் மிக மோசமாக முடிவுகள் எடுத்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு தவறாக தீர்ப்பளித்து அம்பயர்கள் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.
இதே போட்டியில் மிகப்பெரிய முரண்பாடாக ஒரு விஷயம் நடந்தது. வைடு ஒன்றுக்கு ரிவ்யூ கேட்ட போது அதை மிக சிரத்தையாக 3 நிமிடங்கள் வரை சரி பார்த்த மூன்றாவது அம்பயர், சஞ்சு சாம்சன் கேட்ச்சை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பார்த்து விட்டு அவுட் என தீர்ப்பு அளித்தார். அதை பலரும் சுட்டிக்காட்டி அம்பயர்களை விளாசி வருகின்றனர்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 ரன்கள் என்ற கடின இலக்கை சேஸிங் செய்தது. சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து தன் அணியை வெற்றி பெற வைக்க போராடி வந்தார். அப்போது அவர் அடித்த பந்தை ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார். அவர் பவுண்டரி எல்லைக்கு அருகே கேட்ச் பிடித்ததால் தடுமாறினார். அவரது கால் பவுண்டரி கோட்டை தொட்டதா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது.
மூன்றாவது அம்பயர் ரிவ்யூ பார்த்தார். அப்போது அவரது கால் பவுண்டரி எல்லையை தொட்டதா என உறுதியாக தெரியாத நிலையில் ஒரு நிமிடம் மட்டுமே ரீப்ளே பார்த்துவிட்டு சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்தார் மூன்றாவது அம்பயர். ஆனால் ரீப்ளேவில் பார்க்கும் போது அவரது கால் பவுண்டரி கோட்டில் தொடுவது போலத்தான் இருந்தது.
இந்த சர்ச்சை நடந்து முடிந்த நிலையில் அடுத்த சில ஓவர்களில் ரபீக் சலாம் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைடு கொடுக்காமல் போனதற்காக ரிவ்யூ செய்தது. சுமார் மூன்று நிமிடத்திற்கும் மேல் அம்பயர்கள் சரிபார்த்தனர் ஒரு வைடுக்கு மூன்று நிமிடங்களுக்கு மேல் செலவு செய்யும் மூன்றாவது அம்பயர், முக்கிய விக்கெட்டான சஞ்சு சாம்சன் விக்கெட் சரியானதுதானா? என பார்க்க ஒரு நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்டார்.
இதை சுட்டிக்காட்டி கிரிக்கெட் விமர்சகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் ஸ்க்ரிப்ட்படி சஞ்சு சாம்சன் அப்போது அவுட் ஆக வேண்டும் என்பதால் தான் அவுட் கொடுத்து இருக்கிறார்கள் என ரசிகர்கள் பலர் அம்பயர் முடிவுக்கு காரணம் கூறி வருகின்றனர்.