மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச தொகையை ஆஸ்திரேலியா உயர்த்தியது.
ஆஸ்திரேலிய அரசாங்கம், அனைத்துலக மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை உயர்த்தியது.
மே 10ஆம் தேதியிலிருந்து அனைத்துலக மாணவர்கள் குறைந்தபட்சம் 29,710 ஆஸ்திரேலிய டாலர் (S$26,498) சேமிப்பில் இருப்பதை ஆதாரத்துடன் காட்ட வேண்டும். இதை அடிப்படையாக வைத்து ஆஸ்திரேலிய கல்லூரிகளில் படிப்பதற்கான மாணவர் விசா வழங்கப்படும்.
இதற்கு முன்பு இந்தத் தொகை 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 21,041 ஆஸ்திரேலிய டாலரிலிருந்து 24,505 ஆஸ்திரேலிய டாலருக்கு அதிகரிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதும் ஏராளமான மாணவர்கள் ஆஸ்திரேலியாவைப் படையெடுத்து வருகின்றனர். இதனால் மாணவர் விசாவுக்கான விதிமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் வாடகைச் சந்தையும் நெருக்கடியில் உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் அனைத்துலக மாணவர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகரித்தது.
மாணவர்கள் நீண்டகாலம் தங்குவதை அனுமதிக்கும் விதிமுறைகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல், நேர்மையற்ற, மோசடியான மாணவர் சேர்ப்பு நடைமுறைகள் குறித்து 34 கல்வி நிலையங்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“தவறாக மாணவர் சேர்க்கப்பட்டக் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் மாணவர் சேர்ப்புக்குத் தடை விதிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தொழில்களில் ஒன்றாக அனைத்துலக மாணவர் சேர்ப்பு உள்ளது.
2022-2023ல் இது, 36.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை பொருளியலுக்குச் சேர்த்துள்ளது.
ஆனால் சாதனை அளவு குடியேற்றம், குறிப்பாக வெளிநாட்டு மாணவர்கள் குடியேறுவது ஆஸ்திரேலிய அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் வாடகை கட்டணங்ளும் அதிகரித்து வருகின்றன.