லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா விளாசல் காரணமாக, லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஐதராபாத், லக்னோ அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் (2), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (3) ஏமாற்றினர். ராகுல் (29), குர்னால் பாண்ட்யா (24) ஓரளவு கைகொடுத்தனர். பின் இணைந்த நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி ஜோடி நம்பிக்கை தந்தது. நடராஜன் வீசிய 17, 19வது ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டிய படோனி, 28 பந்தில் அரைசதம் எட்டினார். கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் பூரன் 3, படோனி ஒரு பவுண்டரி அடிக்க 19 ரன் கிடைத்தன. லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. பூரன் (48), படோனி (55) அவுட்டாகாமல் இருந்தனர்.
சுலப இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. யாஷ் தாகூர் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரி விரட்டினார் அபிஷேக். கிருஷ்ணப்பா கவுதம் வீசிய 3வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ஹெட், நவீன் உல் ஹக் வீசிய 5வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து 16 பந்தில் அரைசதம் எட்டினார்.
மறுமுனையில் அசத்திய அபிஷேக், யாஷ் தாகூர் வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். படோனி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட அபிஷேக், 19 பந்தில் அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய அபிஷேக், யாஷ் தாகூர் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். ஐதராபாத் அணி 9.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் (75 ரன், 6 சிக்சர், 8 பவுண்டரி), ஹெட் (89 ரன், 8 சிக்சர், 8 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.