ரணிலின் வெற்றியைத் தமிழரின் வெற்றியாக மாற்ற வேண்டுமாம்! – இப்படி டக்ளஸ் கூறுகின்றார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒப்பீட்டளவில் வல்லவராக தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியைத் தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமகால அரசியல் நிலவரங்கள், அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் வரவுள்ள தேர்தல் தொடர்பான முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் இந்தக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இதன்போது, தேர்தலில் கட்சியின் வாக்குப் பலத்தை அதிகரிப்புச் செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாகப் பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காகத் தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகின்றார்கள்.
இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக மீள முடியாத பின்னடைவுகளையே ஏற்படுத்தியிருந்தன.
எனினும், நடைமுறை சாத்தியமான சிந்தனையோ, சரியான வேலைத்திட்டத்தை முன்வைத்து அதற்காக உழைக்கும் குணாம்சமோ இல்லாதவர்கள், எமது மக்களை உணர்ச்சியூட்டும் தோற்றுப்போன வழிமுறையையே மீண்டும் கையில் எடுத்து தம்மை அரசியலில் நிலைநிறுத்த முனைகின்றார்கள்.
ஆனால், ஈ.பி.டி.பி. ஆகிய நாங்கள், எமது மக்களுக்கு சரியான வழியை காட்டுகின்ற தனித்துவமான தரப்பு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதுடன் தேர்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம்.
மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் முதல் அபிவிருத்தி உள்ளடங்கலான அரசியல் தீர்வு வரையிலான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்கக் கூடிய ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி. மட்டும்தான் இருக்கின்றது. இதில் அனைவரும் தெளிவாக இருப்பதும் அவசியம்.
கடந்த 34 வருடங்களாக பல்வேறு விடயங்களில் அவை நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு நாம் கட்டி வளர்த்துள்ள தேசிய நல்லிணக்கமும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றது.
எனவே, அடுத்த வரவுள்ள தேர்தல் என்பது தமிழ் மக்களை வெற்றியின் கதாநாயகர்களாக அடையாளப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகளும் மக்களுக்கான தெளிவுபடுத்தல்களும் அமைய வேண்டும்.
அதன்மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கான வழியை பிரகாசமாக்க முடியும்.” – என்றார்.