வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 3 இளைஞர்களுக்கும் விளக்கமறியல்!
ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
வவுனியா பொலிஸ் நிலையப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ரிஸ்வி தலைமையிலான பொலிஸ் இரகசியத் தகவலையடுத்து அவர்கள் கடந்த 28 ஆம் திகதி செட்டிகுளத்தில் வசிக்கும் 35 வயது இளைஞர் ஒருவரை 17 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று மேற்படி இளைஞர் பொலிஸாரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உக்குளாங்குளம், மில் வீதி பகுதியில் வைத்து செட்டிகுளத்தில் வசிக்கும் 36 வயதுடைய இளைஞரும் 12 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இருவருக்கும் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்ததாக வவுனியா நகரப் பகுதியில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.
கைதான மூவரையும் வவுனியா பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.