ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பாக்லான் மாகாணத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் பல வீடுகள் சேதமடைந்தன. இதனால் வீடுகளுக்குள் சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சாலைகள் சேறும், சகதியுமாக காட்சிஅளிக்கின்றன. இதனால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என ஆளும் தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மீட்புக்குழுவினர் உணவு, மருந்து, கம்பளி போர்வை உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு வழங்கி வருகின்றனர். தலைநகர் காபூலிலும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் சிக்கி தவித்தனர். மத்திய மற்றும் மேற்கு ஆப்கனின் கோர் மற்றும் ஹெராட் மாகாணங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக கடந்த மாதம் நாடு முழுதும் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்ட வீடுகள், மூன்று மசூதிகள், நான்கு பள்ளிகள் பலத்த சேதமடைந்தன. பல நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 2,500க்கும் மேற்பட்ட கால்நடைகளும்பலியாகின.