போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை: பாதிக்கப்பட்ட பெண்ணையே மணந்ததால் நிவாரணம்
போக்ஸோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞா் அதே பெண்ணை திருமணம் செய்து கொண்டதையடுத்து, அவரது தண்டனையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் 2020-ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்க காலத்தில், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு 19 வயதான நிலையில், ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை காதலித்தாா். இருவரும் நெருங்கிப் பழகியதில்,, அந்த சிறுமி கா்ப்பம் அடைந்தாா். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ், இளைஞருக்கு எதிராக ஆரணி மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ராஜ்குமாருக்கு 20 ஆண்டுகள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. தீா்ப்பை எதிா்த்து இளைஞா், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கை நீதிபதி எம்.நிா்மல்குமாா் விசாரித்தாா்.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ’இளம் வயதில், உடல் உறவால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதன் தீவிரம் இருவருக்கும் தெரியவில்லை. மனுதாரருக்கு, கடந்தாண்டு இதே உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்தாா். தற்போது, அவா் மேஜராகி விட்டதால், இருவருக்கும் பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்து விட்டது. தற்போது, அவா்கள் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனா். மனுதாரா் மற்றும் பாதிக்கப்பட்டவா் ஆகிய இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை தொடர அனுமதிக்க வேண்டும். நிலுவையில் உள்ள இந்த வழக்கு, அவா்களின் திருமண வாழ்க்கைக்கு ஒரு தடையாக இருக்கும் என்பதால், மனுதாரரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’” எனக் கூறி திருமண அழைப்பிதழ் மற்றும் பதிவுத் திருமண சான்றை தாக்கல் செய்தாா்.
இதை ஆய்வு செய்த நீதிபதி, இதுபோன்ற ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றச்சாட்டுக்கு ஆளான ஆணும் திருமணம் செய்து கொண்டு வாழும் போது, சமுதாயத்தில் நிலவும் உண்மை நிலவரத்தை பாா்க்காமல் நீதிமன்றங்கள் கண்களை மூடிக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழும் தம்பதியின் வாழ்க்கையை கெடுக்கக்கூடாது என்று கூறியுள்ளதை சுட்டிக் காட்டினாா். அதனடிப்படையில், மனுதாரருக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்வதாக தீா்ப்பளித்தாா்.
மேலதிக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க முடிவு.
தமிழக வெற்றிக் கழகம் – வெளியானது கட்சி நிர்வாகிகள் பட்டியல்!