“பாஜக மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார்” – பாஜக மீது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களை எதிர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அனுமர் கோயிலில் தனது மனைவி சுனிதாவுடன் சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 75 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் சந்திக்காத இன்னல்களை ஆம்ஆத்மி கட்சி சந்தித்து வருவதாகக் கூறினார். தன்னை கைது செய்ததன் மூலம், நாட்டில் யாரை வேண்டுமானாலும் சிறைக்குத் தள்ள முடியும் என பாஜக செய்து காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் . மேலும், ஒரு நாடு ஒரே தலைவர் என்ற நோக்கம்தான் பிரதமர் மோடியின் திட்டம் எனவும் கெஜ்ரிவால் சாடினார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களை எதிர்த்த மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க சர்வாதிகார முயற்சி நடப்பதாக கூறிய அவர், அதை எதிர்க்க, 140 கோடி மக்களும் தனக்கு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலதிக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க முடிவு.
தமிழக வெற்றிக் கழகம் – வெளியானது கட்சி நிர்வாகிகள் பட்டியல்!
போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை: பாதிக்கப்பட்ட பெண்ணையே மணந்ததால் நிவாரணம்