மீண்டும் பொலிஸ் அராஜகம் – அடாவடி! இரவில் பெண்கள் கதறக் கதறக் கைது!! – சிறீதரன் கடும் கண்டனம்.
“பொலிஸ் அராஜகம், பொலிஸ் அடாவடித்தனம், பொலிஸாரின் மிருகத்தனம் இந்த மண்ணில் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மிக மோசமான நாடு, மிகக் கேவலமான நாடு.” – என்று கடுமையாக விமர்சித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முள்ளிவாய்க்கால் கஞ்சி சுகாதாரமான முறையில் காய்ச்சப்படவில்லை என்று கூறும் நீங்கள், வெசாக் வருகின்றபோது தெருத்தெருவாக வழங்கும் உணவுக் சுகாதாரம் பற்றி எப்போதாவது கேட்டுள்ளீர்களா?” – என்றும் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற நிதிக் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், தொடர்ந்தும் பேசுகையில்,
“இன்றைய நாட்கள் தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாட்கள் .15 வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட, பூண்டோடு அழிக்கப்பட்ட, பாதுகாப்பு வலயம் என அரசால் அறிவிக்கப்பட்டு அந்தப் பாதுகாப்பு வலயத்துக்குள் நம்பிச் சென்ற மக்கள் கொத்துக்குண்டுகளாலும் பொஸ்பரஸ் குண்டுகளாலும் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட நாட்கள். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயோதிபர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்.
மன்னார் மறைமாவட்ட ஆயராக இருந்த வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக இறுதிப் போரில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் காணாமல்போயுமிருப்பதாக முழுமையான துல்லியமான, நம்பகமான ஆவணத்தைச் சமர்ப்பித்திருந்தார். அந்த ஆவணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவாலும் உலக நாடுகளாலும் ஒரு முக்கிய கருவியாகக் கொள்ளப்படுகின்றது.
இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டும் இந்த நாட்டில் எந்தவொரு திராணியுள்ள, தைரியமுள்ள சிங்களத் தலைவரும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவும் இல்லை. ஆறுதல் சொல்லவும் இல்லை.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால், தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்ட நினைவு வாரம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சீனன்வெளி கிராம மக்களோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்தி அவர்களோடு விடயங்களை ஆராய்ந்தேன். அன்றைய தினம் மூதூர் பிரதேசத்தில் சேனையூர் கிராமத்தில் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி நினைவு கூர்ந்தார்கள் . முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இந்தக் கஞ்சிதான் எத்தனையோ மக்களின் உயிர்களைக் காப்பாற்றியது என்பதனை நினைவு கூர்ந்தார்கள் .
சேனையூர் கிராமத்தில் இந்தக் கஞ்சியைக் காய்ச்சிக் கொடுத்த பெண்களை ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண், பெண் பொலிஸார் மிருகங்களாக மாறி, மிகக் கேவலமாக கதறக் கதற அந்தப் பெண்களைக் கைது செய்துள்ளனர். ஒரு கஞ்சி காய்ச்சிக் கொடுத்தவர்களை இரவு வேளையில் சென்றுதான் உடுத்த உடுப்போடு கதறக் கதறக் கைது செய்து கொண்டு வர வேண்டுமா? கமலேஸ்வரன் விஜிதா, கமலேஸ்வரன் தேமிலா, செல்வவினோத்குமார் சுஜானி ஆகிய 3 பெண்களே இவ்வாறு மிருகத்தனமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஹரிஹரகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நாட்டில் என்ன நடக்கின்றது? இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கின்றது? பலரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேசுகின்றார்கள். ஜனாதிபதி வேட்பாளர்கள் இறக்கப்படுகின்றார்கள். ஆனால், பொலிஸ் அராஜகம், பொலிஸ் அடாவடி, பொலிஸாரின் மிருகத்தனம் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இந்த மண்ணில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதே திருகோணமலை மண்ணில்தான் 1954 ஆம் ஆண்டு 154 தமிழ் விவசாயிகள் இதே பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கச் சிங்களக் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது தொடங்கிய இந்தப் பொலிஸ் அராஜகம், பொலிஸ் இனவாதம் மீண்டும் திருகோணமலை மண்ணில் அரங்கேறியுள்ளது.
கஞ்சி சுகாதாரமான முறையில் காய்ச்சப்படவில்லை என்று சொல்வதற்கு அந்தச் சுகாதார அறிவுறுத்தலை பொலிஸாருக்கு வழங்கியவர்கள் யார்? ஆகவே, மிக மிலேச்சத்தனமாக, மிருகங்களாக பொலிஸார் நடந்துள்ளனர்.
வெசாக் வருகின்றபோது நீங்கள் தெருத்தெருவாக உணவு வழங்குகின்றீர்கள். கஞ்சி வழங்குகின்றீர்கள். அப்போது சுகாதாரம் பற்றிக் கேட்டீகளா? அல்லது யாரும் அதனை வேண்டாம் என்று சொன்னார்களா?
இலங்கை மிக மோசமான நாடு. மிகக்கேவலமான நாடு. உலகத்தில் அதிகமான நேரம் நித்திரை கொள்ளும் நாடுதான் இலங்கை என்று அறிந்தேன். ஆனால், கஞ்சி வழங்குபவர்களையே கைது செய்யும் கேவலமான நாடாக இலங்கை உள்ளது. 15 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது பாற்சோறு வழங்கி அதனைக் கொண்டாடிய நாடே இலங்கை.
யாருக்கு நல்லிணக்கம் தேவை? யாருக்கு சமாதானம் தேவை? யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? என்பதனை, எவருடைய மனங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதனை, யாருடைய அராஜகங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதனை இலங்கையில் இருக்கின்ற தொண்டு நிறுவனங்களும் சமாதானம் விரும்புகின்ற, நல்லிணக்கம் விரும்புகின்ற அமைப்புக்களும் கருத்தில் எடுக்க வேண்டும்.
இவ்வாறான அராஜகம் நடக்கும் நிலையில்தான் சர்வதேச மன்னிப்பு சபையினுடைய செயலாளர் நாயகம் அக்னஸ் கல்மாட் இலங்கை வருகின்றார். அவர் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றுகின்றார் என்று செய்திகள் வந்துள்ளன. அவருக்கு நான் இந்தச் சபை ஊடாக ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இங்கே நல்லிணக்கம் இல்லை. சமாதானம் இல்லை. இங்கே பொலிஸ் அராஜகம் உள்ளது என்பதனை உங்கள் கவனத்துக்குச் சமர்ப்பிக்கின்றோம்.”