நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! – அரசுக்கு விக்கி எச்சரிக்கை.
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் கொழும்பிலிருந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு:-
“இரவில் ஆண் பொலிஸாரால் அநாகரிகமான முறையில் பெண்கள் கைது செய்யப்படுகின்றார்கள். நம் நாடு எங்கே போகின்றது?
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இறந்தவர்களின் நினைவாக கஞ்சி வழங்கிய சில பெண்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக – முரட்டுத்தனமாகக் கைது செய்யப்பட்டு அவர்களது வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கஞ்சி வழங்குவது ஆரோக்கியமற்றது என நீதிமன்றத்தில் பொலிஸார் உத்தரவு பெற்று, அவ்வாறு விநியோகிக்கத் தடை உத்தரவு வாங்கியுள்ளனர் எனத் தெரிகின்றது. அப்படியானால், பொதுச் சுகாதார அதிகாரி மூலம் அல்லவா அந்த உத்தரவைப் பெற்றிருக்க வேண்டும்? பொலிஸ் எதற்கு?
அம்பிகா சற்குணநாதன் அம்மையார் கேட்டது போல், மே தினத்தை ஒட்டியோ அல்லது வெசாக் தான தினத்திலோ பொலிஸார் அத்தகைய தடை உத்தரவுகளைப் பெறுவார்களா?
2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியை ஒட்டிய காலத்தில் இலங்கை இனவாத அரசினால் ஒப்பேற்றப்பட்ட இனப் படுகொலையை மூடிமறைக்கும் அப்பட்டமான முயற்சியே இது.
இத்தகைய தேவையற்ற, கபடத்தனமான மூடிமறைப்புச் செயல்களை இலங்கை நாடும், அதன் அரசும் எந்தளவுக்கு மேற்கொள்கின்றனவோ, அவ்வளவுக்கு அதிகமாக, இறந்தவர்களை நினைவு கூர்ந்து, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் நமது மக்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.
கைதானவர்களுக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் பெற்று, நெருக்கடியில் இருக்கும் அந்தப் பெண்கள் உட்பட அனைவரையும் விடுவிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்குவார் என்று நம்புகின்றேன்.
2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியை எனது தமிழ்ச் சகோதரர்கள் கூடுதலான உற்சாகத்துடனும் உறுதியுடனும் நினைவுகூர்வார்கள்.” – என்றுள்ளது.