அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைக்கும் பொலிஸாரின் அராஜகப் போக்கு! – சித்தர் கண்டனம்.

“படுகொலையுண்ட தமது உறவுகளை நினைவேந்தும் நமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும். இவ்விடயத்தை நிதானத்தோடும், நீதி – நியாயத்தோடும், தார்மீகத்தோடும் அணுகும்படி தனது பொலிஸ் கட்டமைப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுக்கமாகப் பணிப்புரை கொடுத்து வழிநடத்த வேண்டும். அதில் அவர் தவறுவாரேயானால் முன்னரும் சில தடவைகள் தமிழர்களிடம் அரசியல் பாடம் படித்த கசப்பான அனுபவம் போன்ற ஒரு பட்டறிவை திரும்பவும் அவர் பெற வேண்டிய துர்ப்பாக்கியம் நேர்ந்தாலும் நேர்ந்து விடும்.”
இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகித்தவர்கள் சம்பூரில் ஈவிரக்கமற்ற முறையில் இரவு வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையையொட்டி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“தமிழ் மக்களின் நினைவேந்தும் உரிமை மறுக்கப்படக் கூடாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பல தடவைகள் வலியுறுத்திக் கூறி வந்திருக்கின்றார். அப்படி இருக்க அவரது பொலிஸ் துறை அதற்கு முற்றிலும் மாறாகவே இப்போது நடக்கின்றது.
இதனை நோக்கும்போது நமக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது. ஒன்றில் – பொலிஸ் துறை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இல்லை, தமது கொள்கை – கோட்பாட்டை தமது பொலிஸ் துறை மூலம் செயற்படுத்தச் செய்யும் நிர்வாக அதிகார வலிமை அவரிடம் இல்லாமல் இருக்கலாம். அல்லது அவரும் இரட்டை வேடம் போட்டுத் தமிழரிடம் கூறுவது ஒன்று, தனது சிங்களவர்கள் மூலம் செய்விப்பது வேறு என்று இருக்கலாம்.
எது, எப்படியாயினும் இந்தப் போக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியலுக்கு நல்லதல்ல.
இத்தகைய அடக்குமுறைக்கு எதிராப் போராடிப் பழக்கப்பட்டவர்கள் நமது தமிழ் மக்கள். நாங்கள் அடங்கோம். நினைவேந்தல் உரிமைகளுக்காகவும் அடங்காமல் போராடுவோம் என்ற செய்தியை ஜனாதிபதிக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.” – என்றார்.