வி.பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது இந்தியா

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பாதகமான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இன்னும் ஈடுபட்டு வருகின்றனர் என்று மத்திய அரசு கருதுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதாலும், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதற்கான ஆதரவுத் தளத்தை அதிகரிப்பதாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு செவ்வாய்கிழமை நீட்டித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் பிரிவு 3 இன் துணைப் பிரிவுகள் (1) மற்றும் (3) ஐப் பயன்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் இராணுவத் தோல்விக்குப் பிறகும், விடுதலைப் புலிகள் ‘ஈழம்’ (தமிழர்களுக்கான சுதந்திர நாடு) என்ற கருத்தை கைவிடவில்லை என்றும், நிதி திரட்டி, ஈழத்துக்காக ரகசியமாகச் செயல்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பரப்புரை நடவடிக்கைகள் மற்றும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அல்லது அங்கத்தவர்கள் சிதறிய செயற்பாட்டாளர்களை மீண்டும் ஒருங்கிணைத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அமைப்பினை மீளெழுப்புவதற்கான முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளனர்.

“விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள்/கூறுகள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்தி வருகின்றன, இது இறுதியில் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது வலுவான சிதைவுக்கான செல்வாக்கைக் கொண்டிருக்கும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.