நினைவேந்தல் நிகழ்வை எவரும் தடுக்கவே முடியாது! தமிழரை ஏறி மிதித்தால் கோட்டாவின் நிலையே ரணிலுக்கும்!! – சம்பந்தன் கடும் எச்சரிக்கை.
“இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு. அதனால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்தி வருகின்றார்கள். அந்த நிகழ்வை எவரும் தடுக்கவே முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன். இதனையும் மீறி நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை ஏற்படுத்தித் தமிழர்களை ஏறி மிதித்தால் கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும் ஏற்படும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்
திருகோணமலை மாவட்டம், சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறிய மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் இரவு வேளையில் பொலிஸாரால் அநாகரிகமான முறையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதேபோன்று அம்பாறை மாவட்டம், கல்முனையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வுக்குப் பொலிஸாரால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் இந்த அராஜகச் செயல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மே மாதம் உணர்வுபூர்வமானது. அவர்கள், இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்துவதற்கான புனிதமான மாதமே இந்த மே மாதமாகும்.
அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவேந்துவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தை யாரும் நிராகரிக்கவே முடியாது. அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது.
அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவதும், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும். அதேநேரம், திருகோணமலை, சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இரவு வேளையில் அவர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸார், அவர்களைக் கைது செய்துள்ளார்கள். அம்பாறை, கல்முனையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு தடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் இந்த அடாவடிகள் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும். இந்தவிதமான செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இது தொடர்பாகக் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். கிழக்கில் பொலிஸார் இந்த அராஜகங்களைப் புரிய யார் அதிகாரம் தந்தது என்று அவரிடம் வினவியுள்ளேன். எனது வன்மையான கண்டனங்களை அவரிடம் தெரிவித்துள்ளேன்.
கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுகின்றேன்.” – என்றார்.