சூரிய வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா எல்-1… புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!
சூரிய வெடிப்பை ஆதித்யா எல்-1 விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.
சூரியனின் வெளிப்புற பகுதிகள் பற்றிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், கடந்த 11-ம் தேதியன்று ஏற்பட்ட சூரிய வெடிப்பின் பல்வேறு பகுதிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட சூரிய புயலின் காரணமாக வழிகாட்டு அமைப்பான ஜி.பி.எஸ் சேவை மற்றும் பல செயற்கைக்கோள் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் தற்போது இந்த பகுதியில் சூரிய புயல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூரியப் புயல் காரணமாக ஏற்படும் காந்த விசை புயல் இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கவனித்து வருவதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
ராணுவத்திற்கு வழிகாட்டுத் தரவுகளையும் வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு காலநிலை குறித்தான தரவுகளையும் அனுப்பும் இஸ்ரோவின் இன்சாட் செயற்கைக்கோள்கள் தொடர்ச்சியாக நல்ல நிலையில் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது
மேலதிக செய்திகள்