உயிரிழந்த மக்களை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாத பரப்புரை : படையினர் உஷார் நிலையில்.
போரில் இறந்தவர்களை நினைவு கூரும் போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு அதிகாரம் அளிக்கும் அரச எதிர்ப்பு இயக்கம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் போர்வையில் வடக்கில் பல இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று (15) முதல் 20 ஆம் திகதி வரை பாதுகாப்பு படையினரை வடக்கு மாகாணத்தில் உஷார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் பொது இடங்களுக்குச் செல்வதில்லை எனினும் தேவை ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும், வடக்கில் கிராமங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த நாட்களில் வடபகுதி மக்களுக்கு கஞ்சி விநியோகிக்கப்படும் வேளையில், கஞ்சியுடன் அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் புலிகள் அமைப்புக்கு விசுவாசமானவர்கள் செயற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் வசிப்பவர்கள் மத்தியில் இவ்வாறான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றார் அவர்.
வடக்கின் பல இடங்களில் யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவது என்ற போர்வையில் பல இளைஞர் அமைப்புக்கள் விடுதலைப் புலிகளினால் உயிரிழந்தவர்களைக் கொண்டாட முற்படும் வேளையில், அந்த இளைஞர் குழுக்களும் அதில் கலந்துகொள்ளும் மக்களிடம் உரை நிகழ்த்தி விடுதலைப் புலிகள் இயக்கம் புத்துயிர் பெற வேண்டும் என்று கூறுவதற்குத் தயாராக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் பங்குபற்றிய மக்களுக்கு அது சம்பந்தமான நோட்டீசுகள் விநியோகிக்கப்பட்டதுடன், பரப்புரைகளும் இடம்பெற்றுள்ளன என பாதுகாப்பு தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.