கல்முனைக்கு அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம்… நிர்மாணப்பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்புரை!
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப்பின் சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க எம்.எச்.எம். அஷ்ரப்பின் சொந்த ஊரான கல்முனையில் இந்த நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.