துப்பாக்கியால் சுடப்பட்ட பிரதமர் ஃபிக்கோவின் உயிருக்கு ஆபத்தில்லை – ஸ்லோவாக்கிய அமைச்சர்.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று அந்நாட்டின் துணைப் பிரதமரும் சுற்றுப்புற அமைச்சருமான தோமாஸ் தராபா தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஃபிக்கோ மே 15ஆம் தேதியன்று அரசாங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
59 வயது திரு ஃபிக்கோவை நோக்கி துப்பாக்கிக்காரன் ஐந்து முறை சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தோமாஸ் தராபா கூறினார்.