இளம் குடும்பப் பெண் வழுக்கி வீழ்ந்து பரிதாபச் சாவு!

வீட்டின் மேல் மாடிக்குத் துணிகளை எடுப்பதற்காகச் சென்றிருந்த இளம் தாய் ஒருவர் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கம்பளை, நாராங்விட்ட பகுதியைச் சேர்ந்த 35 வயதான இரு பிள்ளைகளின் தாயே நேற்று (15) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் கணவன் வேலைக்குச் சென்றுள்ளார். மூத்த மகன் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இளைய மகன் தந்தைக்கு உணவெடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
மதியம் மழை பெய்தபோது, மேல் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காகத் தாய் சென்றுள்ளார். இதன்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பரீட்சை எழுதச் சென்றிருந்த மூத்த மகன், வீடு திரும்பியவேளை தாயைத் தேடியுள்ளார். இதன்போது தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார். பின்னர் தந்தைக்கும், அயலவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.