தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலுக்கு மாற்றாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நோய் தடுப்பு மையங்களை அமைத்து டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலத்தில், நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் சிண்ட்ரோம், மூளையழற்சி
பக்கவாதம், மஞ்சள் காமாலை உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்நோயாளிகளின் வரிசை பட்டியலை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி வரியாக மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி ஆகியவற்றில் டெங்கு பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளாட்சித்துறை அதிகாரிகளோடு இணைந்து கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ கருவிகள், படுக்கைகள் போன்றவற்றை சரியான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு கொசு உற்பத்தி நடைபெறும் இடங்களில் தடுப்பு நடவடிக்கையாக உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளோடு பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஏடிஸ் லார்வாக்களின் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவலை தினசரி கண்காணித்து தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சரியான நேரத்தில் எடுக்க வேண்டும் என்றும் டெங்கு நோய் மேலாண்மைக்குத் தேவையான ரத்தத் தட்டுக்கள், நோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள், போன்றவை மாநிலத்தில் போதுமான அளவில் இருப்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
துப்பாக்கியால் சுடப்பட்ட பிரதமர் ஃபிக்கோவின் உயிருக்கு ஆபத்தில்லை – ஸ்லோவாக்கிய அமைச்சர்.
எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்: சாய் பல்லவி.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்றார் லாரன்ஸ் வோங்.
நினைவேந்தலைத் தடுக்கக் கூடாது! – ரணிலே ஒப்புதல்.