அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்! – ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுமாறு அமைச்சர்கள் சிலரும், மொட்டுக் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கும், எதிரணி அரசியலுக்குத் தலைமைத்துவம் வழங்கும் வகையிலும் செயற்படுவதாலேயே விஜயதாஸ தொடர்பில் மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு ஜனாதிபதி ரணில் சாதகமான பதில் வழங்கவில்லை.
“தன்னை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ரொஷான் ரணசிங்க செயற்பட்டார், அதன்மூலம் அரசியல் இலாபம் பெற முற்பட்டார். அதேபோல் விஜயதாஸவையும் நீக்கினால் அவரும் பிரசாரம் தேடலாம். எனவே, நேரம் வரும்போது உரிய முடிவை எடுக்கலாம்.” – என்று ஜனாதிபதி கூறியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.