பிள்ளைகள் வெளிநாட்டில்! மன விரக்தியடைந்த தந்தை உயிர்மாய்ப்பு!! – யாழில் சோகம்.
யாழ்ப்பாணத்தில் மன விரக்தியில் இருந்த வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்து உயிர்மாய்த்துள்ளார்.
ஏழாலை கிழக்கு, ஏழுகோவில் பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஐயாத்துரை தியாகராஜா என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி வயோதிபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில், அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மன விரக்தியடைந்த அவர் நேற்று (16) அவரது வீட்டில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிர்மாய்த்துள்ளார். இந்தக் காட்சி அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.