விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு அனுப்பப்படும்! – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.

“ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.” – என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தாரக பாலசூரிய மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தற்போது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து ரஷ்ய உக்ரைன் போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்களின் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன. சுற்றுலா விசாவில் இலங்கையர்கள் சிலர் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள். ரஷ்யாவிற்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்ற கேள்விதான் தற்போதைய பிரச்சினையாக காணப்படுகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி ரஷ்யாவில் 600-800 வரையிலானவர்கள் அல்லது அதற்கு அதிகமானவர்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற வகையில், ரஷ்யாவில் இருக்கும் இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் போரில் பங்கேற்றிருப்பது தொடர்பில் தகவல் வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி. ரஷ்யாவில் இவர்கள் தங்கியிருக்கும் பிரதேசம் தொடர்பில் அறிய முடியாமல் இருப்பதே தற்போதைய சிக்கலாகும்.

ரஷ்ய குடியுரிமை வழங்குவது போன்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆள் கடத்தல்காரர்கள் இவர்களை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என அறிய கிடைத்துள்ளது. இந்த ஆள்கடத்தல் செயற்பாடுகளில் இராணுவ உயர் அதிகாரியொருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

எவ்வாறாயினும் ரஷ்யாவிற்கு ஆள்களை அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை நிலைமையை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். பின்னர், இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி அங்கு சென்றுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என நம்புகிறோம். அரசாங்கம் அதற்காக முழுமையாக அர்பணிக்கும்.

வெளிவிவகார அமைச்சர் வெளிநாடு சென்றிருக்கும் நிலையிலும், ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்கான விஷேட தூதுக்குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்ய தூதுவர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து ரஷ்ய தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.