தீவிரப் பிரசாரத்தை மேற்கொள்ளும் கெஜ்ரிவால் – அகிலேஷ் கூட்டணி.

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகிலேஷ் யாதவை வியாழக்கிழமை (மே 16) சந்தித்தார்.

அப்போது அவர்கள் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

“உத்தரப் பிரதேசத்தில் ‘இண்டியா’ கூட்டணிக்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷாவை பிரதமராக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைப் பதவியிலிருந்து நீக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். அரசியல் அமைப்பில் மாற்றம், பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது போன்ற திட்டங்களுடன் மோடி உள்ளார்,” என்று அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“பாஜகவால் 220க்கும் குறைவான இடங்களையே பெறமுடியும். டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு குறையும். ‘இண்டியா’ கூட்டணி தான் ஆட்சி அமைக்கப் போகிறது,” என்றார் கெஜ்ரிவால்.

“543 தொகுதிகளில் பாஜகவிற்கு 143 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது,” என்றார் அகிலேஷ் யாதவ்.

தற்போது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. நான்கு கட்டங்கள் முடிந்த நிலையில் ஐந்தாம் கட்டத் தேர்தல் மே 20ஆம் தேதி நடக்கவுள்ளது. ஐந்தாம் கட்டத் தேர்தலில் 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

‘இண்டியா’ கூட்டணியைப் போலவே பாஜகவினரும் நாடு முழுவதும் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.