36 நாடுகளில் இருந்து மலேசியா வருவோருக்கு தானியங்கி குடிநுழைவு வசதி.

ஜூன் 1ஆம் தேதி முதல் குறைந்த அளவு அபாயம் உள்ள நாடுகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 36 நாடுகளிலிருந்து மலேசியா வருவோர் தங்கள் பாஸ்போர்ட்டை காண்பித்து அந்நாட்டின் தனியங்கி குடிநுழைவு முறையைப் பயன்படுத்தி உள்ளே வர அனுமதி பெறலாம்.

இந்தச் சேவை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1, 2க்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுஷன் இஸ்மாயில், இந்த தானியங்கி குடிநுழைவு முறை மக்கள் நெரிசலையும் குடிநுழைவு அனுமதி கிடைக்க நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதையும் மாற்றும் என்று தெரிவித்தார்.

இந்த வசதியைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் வர ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பஹ்ரேன், ஐக்கிய அரபு சிற்றரசுகள், குவைத், ஜோர்தான், ஓமான், கத்தார், கனடா, சீனா, ஹாங்காங், தைவான் ஆகியவை தகுதி பெற்றுள்ளன.

“இத்துடன் இந்த முறையைப் பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை 46 ஆகிறது,” என்று மலேசிய உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மலேசிய அனைத்துலக விமான நிலையத்தில் இந்த தானியங்கி குடிநுழைவு வசதி பற்றி சென்ற ஆண்டு அந்நாடு அறிவித்தது. அப்பொழுது இந்த வசதியை குறைந்த அபாயம் உள்ள நாடுகள் என அடையாளம் காணப்பட்ட 10 நாடுகள், ஜி 7 எனப்படும் ஆண்டுக்கு ஒருமுறை உலகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக்கூடும் மேற்கத்திய நாடுகள் ஆகியவை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்குடன் தான் கலந்துரையாடியதாகக் கூறிய திரு சைஃபுதின், கோலாலம்பூரில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் இது குறித்த கூடுதல் தகவல் பதாகைகள் வைக்கப்படுவதுடன் வழிகாட்டியாளர்களும் அமர்த்தப்படுவர் என்று விளக்கினார்.

அத்துடன், அங்கு மேலும் 40 தானியங்கி இயந்திரங்களும் விமான நிலையத்தில் வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதையும் சேர்த்து விமான நிலையத்தில் மொத்தம் 98 தானியங்கி இயந்திரங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.