ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா எனும் கேள்விக்கு ரணிலின் பதில்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரச்சினையை அப்படியே இருக்க விடுவதாகத் தெரிவித்தார்.
நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு வெற்றியடையும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறுவது போன்று பாரிய கடன் குறைப்புக்களை எதிர்பார்க்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
IMF உடன்படிக்கையை திருத்த முடியாது
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2033 வரையான இலக்குகள் வழங்கப்பட்டு அவை பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச நிதியங்கள் அதில் திருப்தியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு அரசியல் கட்சியே இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் எனவும் , தேசிய மக்கள் சக்தி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யாது எனவும் தெரிவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இவ்வருடம் சம்பளம் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அரசியல் இலாபம் பெறும் நோக்கில் , தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.