முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தமைக்காக கைதான நான்கு பேருக்கும் பிணை அனுமதி.
முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தமைக்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நால்வரையும் பிணையில் விடுவிக்க மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கியது.
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் ஆறாம் வட்டாரத்தில் உள்ள புவன கணபதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வில் ஈடுபட்டமைக்காக நவரத்தினராஜா ஹரிஹரகுமார் (வயது 43) மற்றும் பெண்களான கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), கமலேஸ்வரன் தேன் நிலா (வயது 21), கஜானி (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு, பொலிஸ் விண்ணப்பத்தின் அடிப்பையில் பின்னர் விலக்கப்பட்ட போதும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குடியியல், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றன எனப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கையிட்டிருப்பதால் அவர்களுக்குப் பிணை வழங்குவதில் நீதிவான் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கொழும்பிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த இரண்டு தினங்களாக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹணவுடன் தொடர்ந்து உரையாடி வந்தார். அதன் அடிப்படையில் மேற்படி நால்வருக்கும் எதிரான வழக்கை குடியியல், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதில் இருந்து விலக்குவது பற்றிய அறிக்கையைப் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது எனத் தெரிகின்றது.
இதையடுத்து தம்முடைய வழிப்படுத்தலில் இயங்கும் மக்களுக்கான நீதி மையத்தின் மூலம் மேற்படி நால்வரையும் பிணையில் விடுவிப்பதற்கான நகர்த்தலை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மேற்கொண்டார்.
அவரின் வழிகாட்டுதலில் திருகோணமலையிலிருந்து ரமணன், முகுந்தன் ஆகிய இரு சட்டத்தரணிகள் மூதூருக்கு விரைந்து இன்று காலையில் பிணை விடுவிப்புக்கான நகர்த்தல் பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் யாழ்ப்பாணத்திலிருந்து மூதூருக்கு விரைந்து இந்த மனு மீதான வாதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பொலிஸார் மேற்படி குடியியல், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயச் சட்டத்தின் கீழ் இந்த விடயத்தை விசாரிக்கின்றமையை விலக்கிக்கொண்டதையடுத்து நால்வரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.